ஜெர்மனியில் 26 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

தமிழகப் பொருளியல் வளர்ச்சியைக் கட்டமைக்க பிரிட்டனிடம் உதவிகோரும் ஸ்டாலின்

2 mins read
6f0cf310-ffbc-4c0f-8f37-7f3174579232
ஜெர்மனியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன் வந்து சேர்ந்தார். அங்குள்ள தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர் கடந்த 2ஆம் தேதி ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்றார்.

லண்டன் விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லண்டனில் பிரிட்டிஷ் அமைச்சர் கேத்தரினை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் பொருளியல் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம் - பிரிட்டன் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினேன். கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கடல் சார் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம்.

“புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐடி உற்பத்தி துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதை அமைச்சரிடம் எடுத்துக் கூறினேன். பொருளியல் வளர்ச்சியைக் கட்டமைப்பதில் பிரிட்டன் ஒத்துழைப்பு அளிக்குமாறு அமைச்சர் கேத்தரினுக்கு அழைப்பு விடுத்தேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். இந்நிலையில் ஜெர்மனி, இங்கிலாந்து பயணங்கள் குறித்து அவர் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்துக்கு ஐரோப்பிய பயணம் துணை நிற்கும். தமிழ் உறவுகள் அளித்த அன்பும், ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்துள்ள ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்,” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில் ‘‘இங்கிலாந்தில் கால் பதித்தேன். தொலைதூரக் கரைகளை கடந்து சென்றும், வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்தது எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு. அங்குள்ளவர்களால் அன்புடனும், பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஜெர்மனியில் ‘டிஎன் ரைசிங் ஜெர்மனி’ என்ற தலைப்பிலான முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிட்டத்தட்ட ரூ.7,000 கோடி மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்