தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக கூட்டணியில் இணைய விஜய், சீமானுக்கு இபிஎஸ் அழைப்பு

2 mins read
f7a11e1a-b503-41d0-b22b-fb91d19e595d
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

“தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகின்றனர். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சியே அமையும்,” என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன.

அடுத்த தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி களமிறங்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுகவும் பாஜகவும் கைகோத்துள்ளன.

புதிதாகத் தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில், தங்களது கூட்டணியில் வந்து சேரும்படி விஜய் கட்சிக்கும் சீமான் கட்சிக்கும் எடப்பாடி பழனிசாமி திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

“கூட்டணி தொடர்பாக சீமான், விஜய் தரப்புடன் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆயினும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த மனமுடைய அனைத்துக் கட்சிகளும் அதிமுகவுடன் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவீர்களா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது ராணுவ ரகசியம் போன்றது. பின்னர் தெரிவிக்கப்படும்,” எனப் பதிலளித்தார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று நடிகர் விஜய் ஏற்கெனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்