பயிர்க் கடன் தள்ளுபடி கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பயிர்க் கடன் தள்ளுபடி கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

1 mins read
f9334074-f4f4-4090-8b6e-eccaffda7613
ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது. - படம்: இந்து தமிழ் திசை

தஞ்சாவூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றனர்.

அப்போது கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆங்காங்கே காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது.

தஞ்சையில் விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் தங்களை ஒருமையில் பேசியதாகக் குற்றஞ்சாட்டிய விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், ஐந்து பேர் மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, பச்சை நிறத் துண்டு அணிந்து வந்தவர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாகவும் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் மூண்டது.

இதேபோல், பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமை அலுவலகம் முன்பு விவசாயிகள் முழங்காலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதி உள்ளிட்ட மேலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்