தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவிரியில் வெள்ளப்பெருக்கு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

2 mins read
14de1f48-ce3e-46fb-9833-c685ae34e830
கடந்த சில நாள்களாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கனமழை நீடித்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்

சேலம்: மேட்டூர் அணை ஏற்கெனவே முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தென் மாவட்டங்களில் உள்ள அணைகளும் நிரம்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாள்களாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கனமழை நீடித்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன.

இதையடுத்து, காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக, இரு நாள்களுக்கு முன்பு நடப்பாண்டில் நான்காவது முறையாக, அந்த அணை முழுக் கொள்ளளவை எட்டியது. எனவே, 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) மாலை நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது திங்கள்கிழமை (ஜூலை 28) மாலைக்குள் ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 75,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரிக் கரையோரம் வசிக்கும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்,” எனக் திரு செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, உடுமலை பஞ்சலிங்க அருவியை மூழ்கடிக்கும் வகையில், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், கடந்த நான்கு நாள்களில் மட்டும், நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணை நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்