சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைவோர் பட்டியலில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் சேர்ந்துள்ளார்.
புதன்கிழமை (மே 27) அவர் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக களமிறக்கப்பட்டார் வெல்லமண்டி நடராஜன். தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைத்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்துவந்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ் திடீரென திமுகவில் இணைந்ததால் கடும் அதிருப்தி அடைந்த திரு நடராஜன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததையடுத்து, அவருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த திருப்பமாக, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்தைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வெல்லமண்டி நடராஜன்.
அவரது மகனும் ஆதரவாளர்களும்கூட தவெகவில் இணைந்துள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஜெயலலிதாவால் அத்தொகுதியில் களமிறக்கப்பட்ட வெல்லமண்டி நடராஜனுக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.


