சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான ஆர்.வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்.
ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு ஆர்.வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தார். அதையடுத்து புதன்கிழமை (ஜனவரி 21) திமுகவின் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார்.
திரு வைத்திலிங்கம் ஒரத்த நாடு தொகுதியில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். அதிமுக உட்கட்சி பூசலின் விளைவாக ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவில் வைத்திலிங்கம் இருந்தார். ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராகவே அவர் பார்க்கப்பட்டவர்.
கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இன்னொரு கட்சியில் சேரக்கூடாது என்பதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய பின் திமுகவில் சேர்ந்தார்.
அவர் திமுகவில் சேர்ந்தது ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி என்று கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்ட ஓபிஎஸ், அவரது ஒவ்வொரு ஆதரவாளராக இழந்து வருகிறார்.
அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதேபோல் மருது அழகுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
திமுகவில் சேர்ந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு வைத்திலிங்கம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பாடுகள் சரியாக இல்லை. அதிமுக சர்வாதிகாரமாகச் செயல்படுகிறது.
“அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு வந்தது. நான் அங்கு தனியாக இணைய விரும்பவில்லை. பிரிந்தவர்கள் ஒன்றாகச் சேர வேண்டும் என்ற நோக்கில் நான் அங்கு செல்லவில்லை. கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்,” என்று கூறியுள்ளார்.

