திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

1 mins read
3a638534-6da4-4a58-8e53-9d5226e73c64
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான் (இடது). உடன் அமைச்சர் எஸ். ரகுபதி. - படம்: ஊடகம்

சென்னை: புதுக்கோட்டைத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கார்த்திக் தொண்டைமான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தம்மை இணைத்துக்கொண்டார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரான கார்த்திக் தொண்டைமான் கடந்த 2012 ஆம்ஆண்டு புதுக்கோட்டைத் தொகுதியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

அதன்பின்னர் 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் அதே தொகுதியில் போட்டியிட்டபோதும் அவருக்கு வெற்றி கிட்டவில்லை.

இந்நிலையில், புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 6) கார்த்திக் தொண்டைமான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக போகும் போக்கே சரியில்லை. அதிமுக மதவாதச் சக்திகளுக்குத் துணைபோகிறது. தமிழகத்தில் மதவாதச் சக்திகள் தலைதூக்கக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவில் இணைந்துள்ளேன்,” என்று கூறினார்.

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் கார்த்திக் தொண்டைமானுக்கும் இடையே தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்துவருவதாகச் சொல்லப்படும் நிலையில், கார்த்திக் தொண்டைமான் இப்போது கட்சி மாறியுள்ளார்.

அவர் முதல்வரைச் சந்தித்தபோது அமைச்சர் எஸ். ரகுபதி உடனிருந்தார்.

குறிப்புச் சொற்கள்