சென்னை: திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே உயர் பதவிக்கு வர முடியும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி காட்டத்துடன் கூறியுள்ளார்.
அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கட்சியின் பொதுச் செயலாளரான பழனிசாமி பேசினார்.
“எல்லா மாநிலத்திலும் ஒரு முதல்வர் தான் இருப்பார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நான்கு முதல்வர்கள் உள்ளனர். ஸ்டாலின் மட்டும் முதல்வராக இல்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பலர் முதலமைச்சர் போல் செயல்படுகின்றனர்.
“அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்த நான் பொதுச் செயலாளராக உள்ளேன். இதுபோல் வேறு எந்தக் கட்சியிலும் சாதாரண தொண்டன் உயர் பதவிக்கு வர முடியாது.
“திமுகவில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உயர் பொறுப்புக்கு வர முடியும். கடந்த அதிமுக ஆட்சியை மோசமான ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆனால் எங்கள் ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. விலைவாசி உயராமல், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம்.
“திமுகவுக்கும், ஜனநாயகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சி.
“அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துகொண்டிருக்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே மு.க.ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு பிறகு தனது மகன் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். கருணாநிதி குடும்பத்தில் இருந்து யாரும் அரசு உயர் பொறுப்புக்கு வர முடியாது. மிசாவின் போது பாதிக்கப்பட்ட பலர் திமுகவில் உள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பதவியில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியுள்ளார்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

