பழனி கோவில் நிலமோசடி வழக்கில் நான்கு பேர் கைது

பழனி கோவில் நிலமோசடி வழக்கில் நான்கு பேர் கைது

2 mins read
299fced3-0dd9-4c32-b184-3c52f4a087e9
கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) முருகதாஸ், வெள்ளைத் துரை, சேதுபதி, அன்வர்தின். - படம்: இந்து தமிழ் திசை

திண்டுக்கல்: பழனி கோவில் நிலமோசடி வழக்கில் தொடர்புள்ள நான்கு பேர் புதன்கிழமை (ஜூலை 29) கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பிரிவினர், அதிகாலையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமாக 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக அங்கு இலவச வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை சிலர் இரண்டு கோடி ரூபாய்க்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

பக்தர்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த மோசடி தொடர்பாக சார்பதிவாளர், நிலத்தை விற்ற இருவர், நிலத்தை வாங்கிய இருவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இப்பிரிவின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மேலும் பதிவுத்துறையும் தன் பங்கிற்கு உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு மாநில அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை (ஜூலை 29) அதிகாலை நிலத்தை மோசடியாக விற்றவர்கள், வாங்கியவர்கள் என நான்கு பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கோவில் சொத்துகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரிக்க மாநில அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சமீபத்திய கைது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இதுபோன்ற நிலப் பிரச்சினை சம்பந்தமாகப் புகார் அளிக்க தமிழக இந்து சமய அறநிலையத் துறை அண்மையில் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்