நட்சத்திரத் தொகுதியில் ‘நால்வர்’ போட்டி

நட்சத்திரத் தொகுதியில் ‘நால்வர்’ போட்டி

2 mins read
கொளத்தூரில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்
0d687dd5-477c-4189-bdd2-040a33fd2286
கொளத்தூர் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முக்கிய வேட்பாளர்கள் நால்வரைத் தவிர, மீதமுள்ள 31 பேர் சிறு கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் முக்கிய தொகுதியான கொளத்தூரில், தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி என்பதால், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் இங்கு குவிந்துள்ளது.

இத்தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

4வது வெற்றியை எதிர்நோக்கும் முதல்வர் (திமுக)

கொளத்தூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி கண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது 4வது முறையாகப் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், கட்சி நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள், அரசின் சாதனைகளை மையப்படுத்தி திமுக தனது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

வாக்குறுதிகளுடன் களமிறங்கிய சந்தான கிருஷ்ணன் (அதிமுக)

அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன், திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் களம் காண்கிறார்.

தொகுதியில் நிலவும் தீர்க்கப்படாத கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டி அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொள்கை முழக்கமிடும் சவுந்திர பாண்டியன் (நாதக)

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சவுந்திர பாண்டியன், கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அனல் பறக்கும் பேச்சுகளை ஒலிபரப்பியபடி தொகுதி முழுவதும் வலம் வருகிறார்.

மது ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றை முதன்மை முழக்கங்களாகக் கொண்டுள்ளார்.

இலவசக் கல்வி, தரமான மருத்துவம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகிய வாக்குறுதிகளுடன் அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

கவனத்தை ஈர்க்கும் வி.எஸ். பாபு (தவெக)

முதல் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வி.எஸ். பாபு போட்டியிடுகிறார்.

மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது முதல் வேலை என அவர் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட ஒருவருடன் அவர் வீதிவீதியாகச் செல்வது தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க, கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால், இந்த விஐபி தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, உத்திரமேரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுந்தர், வித்தியாசமான முறையில் குதிரை வண்டியில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்புச் சொற்கள்