தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு: செந்தில் பாலாஜி

தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு: செந்தில் பாலாஜி

1 mins read
653baf5a-ac62-46fc-bc52-dc69cd1b6e9d
செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்: நியூஸ் 18

கோவை: தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு எனத் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தாம் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொண்டதே இல்லை என்றும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

இம்முறை கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அங்கு தீவிர களப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

கோவை தெற்கு மட்டுமல்லாமல், அம்மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அதிமுகவினர் தோல்வி பயத்தில் இருப்பதால் வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அமைதியாக உள்ள கோவையைக் கலவரப்பூமியாக மாற்ற ஒருசிலர் முயற்சி செய்வதை ஏற்க முடியாது என்றார்.

“திமுகவினர் பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகளை அடுக்கலாம். ஆனால், அதை ஏதாவது ஓரிடத்திலாவது நிரூபிக்க வேண்டும். வாக்களிக்கப் பணம் கொடுப்பது யார், வாங்குவது யார் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும். வாக்களிக்கப் பணம் கொடுப்பதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்,” என்றார் செந்தில் பாலாஜி.

திமுகவினர் பண விநியோகத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதைத் தாம் திட்டவட்டமாக மறுப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆதாரம் இருப்பின் இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் என்றார்.

குறிப்புச் சொற்கள்