சென்னை: பல்வேறு கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, கல்வி, இணை செயல்பாடுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் கல்விச் சுற்றுலாவாக மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய சுற்றுலாவுக்கு தமிழக கல்வித்துறை ஏற்பாடு செய்கிறது.
ஆண்டுதோறும் தமிழக அரசு இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், 2023-24ஆம் ஆண்டுக்கான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஐந்து நாள் பயணமாக பிப்ரவரி 23ஆம் தேதி மலேசியாவுக்குப் புறப்பட்டனர்.
ஐந்து நாள் பயணத்தின்போது மாணவர்கள் பத்து மலை முருகன் கோவில், புத்ராஜெயா, கேஎல்சிசி, கெந்திங் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் புறப்பட்டுச் சென்றதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

