சென்னை: கோடைக் காலம் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
வெயிலின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், முக்கியச் சாலைச் சந்திப்புகளில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் காலை வேளைகளில் பணிக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேபோல் மாலையும் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்கும் முன்பே வெயில் கடுமையாக உள்ளது.
கடந்த ஈராண்டுகளாக முக்கியச் சாலைகளில் உள்ள போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளையொட்டி, சென்னை மாநகராட்சி சார்பாகப் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டன. இதனால் பத்து நொடிகள் முதல் ஒரு நிமிடம் வரை சாலைச் சந்திப்புகளில் காத்து நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது. இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வழக்கம்போல் இந்த ஆண்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதில் தனியார் உதவியும் பங்களிப்பும் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் அரசியல் கட்சிகளும் இத்தகைய பசுமைப் பந்தலை அமைக்க ஏற்பாடுகளைச் செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

