சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
எச்.ராஜா தனது குடும்பத்தார், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு பாஜக தேசியக் குழு உறுப்பினர் எச். ராஜா (68 வயது), தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல் வெளியானது.
இதனிடையே, எச். ராஜா பக்கவாத (ஸ்டிரோக்) பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் (மருத்துவச் சேவைகள்), பி.ஜி. அனில் தெரிவித்துள்ளார்.
அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திரு அனில் வெளியிட்ட செய்தித் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

