சென்னை: திடீர் புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
புகைமூட்டத்திற்கான காரணம் தெரியாததால் பீதியடைந்த பயணிகள், அலறியடித்து ஓட்டம்பிடித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இரண்டாவது முனையத்தின் இரண்டாம் தளத்தில் இயங்கிவரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டு விற்பன அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீப்பற்றியதே புகைமூட்டத்திற்கான காரணம் எனத் தெரியவந்தது.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) நண்பகல் 12 மணியளவில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஊழியர்களும் பயணிகளும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து, தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் அங்கிருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதுடன் தீ விபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், சென்னை அனைத்துலக விமான முனையத்தின் புறப்பாட்டுப் பகுதியில் உள்ள விமான நிறுவனத்தின் அலுவலகத்தில் வாகனங்கள் வைத்திருக்கும் அறையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது என்றும் அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானச் சேவைகள் வழக்கம்போல் இயங்குகின்றன என்றும் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

