கோயில் நிலத்தில் தார்ச்சாலை: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தில் தார்ச்சாலை: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

படம்: கல்கி

04 Nov 2026 - 8:34 pm

1 mins read

சென்னை: சென்னையை அடுத்த வேளச்சேரியில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கும் நோக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தில் தார்ச்சாலை அமைக்கும் மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்த வழக்கில், சென்னை மாநகராட்சியும் இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர், யோக நரசிம்மர் கோயில்களுக்குச் சொந்தமான 5.41 கிரவுண்ட் நிலத்தைப் பயன்படுத்தி, வெங்கடேஸ்வரா நகர் 2வது, 5வது பிரதான சாலைகளை இணைத்து தார்ச்சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது.

அதற்காக அறநிலையத்துறையிடம் தடையில்லாச் சான்று கோரப்பட்டிருந்த நிலையில், கோரிக்கை நிலுவையில் இருக்கும்போதே, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அந்நிலத்தைப் பயன்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் அக்டோபர் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “அருகில் அரசுப் புறம்போக்கு நிலம் உள்ளபோதும், கோயில் வேலியைச் சேதப்படுத்தி கனரக இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக நிரந்தரச் சாலை அமைக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழான உத்தரவு அவசரக் காலத்தில் மேள்கொள்ளப்படும் தற்காலிக நடவடிக்கையே என்று சுட்டிக்காட்டினர். மனு குறித்து சென்னை மாநகராட்சியும் இந்து சமய அறநிலையத்துறையும் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்