சிறைப் பாதுகாப்பு குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைப்பு

சிறைப் பாதுகாப்பு குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைப்பு

படம்: மாலை மலர்

03 Nov 2026 - 4:06 pm

2 mins read

சென்னை: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச்சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முதல்வர் விஜய் விசாரணை ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

அந்த ஆய்வின்போது பெறப்பட்ட விவரங்கள், கருத்துகளின் அடிப்படையில், சிறைத்துறையின் பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தவும் எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் ஓர் உயர்நிலைக் குழுவை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையிலான அக்குழுவில், சிறைத்துறை ஏடிஜிபி சங்கர், சிறைத்துறை முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.

இக்குழுவானது, கைதிகள் தப்பிய சம்பவத்துக்கு வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தும். மேலும், தற்போதுள்ள நடைமுறைகள், அலுவலர்களின் பணிச்சுமைக்கு என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த சிறை மேலாண்மை நடைமுறைகளை ஆராய்ந்து, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இக்குழு விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கும்.

சிறைகளின் பாதுகாப்பை போர்க்கால அடிப்படையில் பலப்படுத்தவும் பணி நேரத்தில் கவனக்குறைவாகச் செயல்படும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தவிட்டுள்ளார்.

இதனிடையே, தேனி மாவட்டச் சிறைச்சாலையில் காவலர்கள் அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியதால்தான் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதாக 17 கைதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறைக்காவலர்கள் தாக்கியதால் சில கைதிகளுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, புழல் சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பியோடியதை அடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறை வளாகத்திற்கு வெளியே கைதிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வந்த ‘ஃப்ரீடம்’ பஜார், உணவகம், இறைச்சியகம், பெட்ரோல் நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டன.

இந்நிலையில், பொதுமக்கள், கைதிகளின் உறவினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னை புழல் சிறை-1 அருகே உள்ள ‘ஃப்ரீடம் பஜார்’ கடை மட்டும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்