மாநிலக் கட்சிகளே மக்களின் விருப்பம்

மாநிலக் கட்சிகளே மக்களின் விருப்பம்

2 mins read
3811b090-1646-4e92-9895-5a022ef0f758
இறுதி நிலவரம். - படம்: புதிய தலைமுறை
multi-img1 of 3
Google News Preferred Icon

85 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு என்ற வியப்புடன் தொடங்கிய தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவும் வியப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக இன்னும் சில வியப்புகள்.

திமுக இரண்டாம் இடத்துக்கு வந்தாலும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகமுடியவில்லை.

எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றாலும் அதிமுக மூன்றாமிடம் சென்றதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடரமுடியவில்லை.

108 தொகுதிகளில் வென்றாலும் தவெகவால் தனிப்பெரும்பான்மை பெற இயலவில்லை.

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினாலும் நாம் தமிழர் கட்சியால் ஒன்றில்கூட வைப்புத்தொகையைப் பெற இயலவில்லை.

அதற்கு அப்படியே மாறாக, தவெக நிறுத்திய 233 வேட்பாளர்களும் எடப்பாடியில் தவெக ஆதரவுபெற்ற சுயேச்சையும் தங்களது வைப்புத்தொகையை மீட்டுள்ளனர்.

விஜயகாந்த் 2006ல் தனித்துக் களமிறங்கியபோது 234 தொகுதிகளில் அவர் நிறுத்திய வேட்பாளர்களில் பெரும்பாலோர் வைப்புத்தொகையை இழந்தனர்.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறை தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ளது. 2006ல் திமுக பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட்டணியாக 163 இடங்களில் வென்றதால் தொங்கு சட்டமன்றம் ஏற்படாமல் அப்போது தவிர்க்கப்பட்டது.

திமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளதால் உதயநிதி ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சி நியமிக்கக்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் திரை நட்சத்திரங்களாக இருப்பர்.

2008ல் தனது திரையுலகப் பயணத்தை விஜய்யின் ‘குருவி’ படத் தயாரிப்பிலிருந்து தொடங்கியவர் உதயநிதி ஸ்டாலின்.

இவை எல்லாம் அதிசயங்களாக இருப்பினும், மேற்கு வங்கத்தில் நிகழ்த்தியதுபோல பாஜகவால் எந்த ஓர் அதிசயத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்த இயலவில்லை.

மம்தாவிடமிருந்து மேற்கு வங்கத்தை மீட்ட பாஜக, அங்கு ஆட்சி அமைக்க இருக்கிறது. 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் ஆட்சிபுரியும் கட்சியே மாநிலத்தில் ஆளும் நிலை மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ளது.

ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசும் பாஜகவும் எவ்வளவோ முயன்றும் அப்படிப்பட்ட ‘மத்திய-மாநில ஒரு கட்சி ஆட்சி’யை தமிழகத்தில் ஏற்படுத்த இயலவில்லை.

மாநிலக் கட்சிகள் மீதே தமிழ்நாட்டு மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்பது புதிய கட்சியான தவெகவுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகள் நிரூபித்துள்ளன. அதேநேரம், காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற தேசியக் கட்சிகள் ஒற்றை இலக்க வெற்றியையே இந்தத் தேர்தலில் பதிவு செய்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

திமுக, அதிமுக வரிசையில் மூன்றாவது பெரிய மாநிலக் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தனித்து நின்று வெற்றி காணும் திறனைப் பெற்றுள்ளதால் தவெக இனி அதனையே தொடரக்கூடும். அப்படிப்பட்ட நிலையில், தேசியக் கட்சிகள், அதிமுக மற்றும் திமுக தயவில் தொடர்ந்து இயங்கக்கூடிய சூழலே நீடிக்கும்.

அகில இந்தியக் கட்சிகளை தமிழக மக்கள் அந்நியமாகப் பார்க்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அப்படி ஒரு வரலாற்றை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வருவது தமிழ்நாடு மட்டுமே என்பது சிறப்பான அதிசயம். -திருநா

குறிப்புச் சொற்கள்