சென்னை: தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களை ஆளும் தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தின் மூலம் வாங்கி வருவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம் அக்கட்சி புகார் மனு ஒன்றை அளித்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தனபால் ஆகியோர் இந்த மனுவை ஆளுநரிடம் வழங்கினர்.
அம்மனுவில், குதிரை பேரம் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசி வரும் தவெக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு தனித்து ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார் முதல்வர் விஜய்.
இந்நிலையில், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் நான்கு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
இதனால் காலியாக உள்ள நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் தவெக பக்கம் சாயக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
இத்தகைய சூழலில், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மோசமான குதிரை பேர அரசியலை தவெக நடத்தி வருகிறது என்று திரு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தைக் கட்சி அலுவலகம்போல் மாற்றி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து ஆளுங்கட்சி நடத்தும் குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“ராஜினாமா செய்த நான்கு அதிமுக எம்எல்ஏக்களின் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகத் தகவல் வருகிறது,” என்று ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

