எத்தனையோ தேர்தல்களைக் கண்டிருக்கிறோம். இந்தத் தேர்தலில்தான், முடிவு வருவதற்குள் ஒவ்வொரு நாளும் ஏராளமான விவாதங்கள், விமர்சனங்களை சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நிறைகின்றன. விஜய் என்னும் தனி ஒருவர் ஏற்படுத்திய தாக்கம் பலநூறு சிந்தனைகளை விதைத்து வருகிறது. புலி வருமா வராதா என்பது தெரியாது. ஆனால், புலி வந்தால் யாரைக் கடிக்கும், யாருக்குப் பெரிய காயம் ஏற்படும் என்பது மாதிரியான கற்பனை கலந்த ஊகங்கள் வாக்குப் போட்டவர்களைக் குழப்பி வருகின்றன.
தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் காணாத ஒரு மாற்றத்திற்குத் தயாராகி வருவதாக ஒருசிலரும் மாற்றம் விரும்புவோருக்கு ஏமாற்றமே மிஞ்சும் என வேறுசிலரும் கதைகட்டுகிறார்கள்.
‘எக்ஸ் ஃபேக்டர் (X - Factor)’ என்று குறிப்பிடப்படும் விஜய், தனிப்பட்ட முறையில் பெறும் வெற்றியைக் காட்டிலும் இரு பெரும் ஆதிக்க சக்திகள் ஆட்சியில் அமர்வதைத் தடுப்பதே அவரைப் பொறுத்தவரை முதல் வெற்றி. அந்த இரு சக்திகளும் தமிழக மண்ணில் காலம் காலமாக வலுவான கட்டமைப்புகளுடன் வேரூன்றி தலைதூக்கி நிற்கும் நிலையில், அவற்றின் வேர்களை விஜய்யால் அவ்வளவு எளிதில் அகற்றிவிட முடியாது என்றாலும் அசைத்துப் பார்க்க முடியும் - ஒரு விவாதத்தில் உதிர்க்கப்பட்டவை இவை.
வாக்குகளைப் பிரித்து ஒரு ‘கிங் மேக்கராக’ உருவெடுக்கும் கனவு விஜய்க்கு இருக்கலாம். தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகள் அதிமுக கூட்டணிக்கோ திமுக கூட்டணிக்கோ கிடைக்கக்கூடாது என்பது அவரின் குறிக்கோளாக இருக்கக்கூடும்.
எடுத்த எடுப்பிலேயே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துவிடாது என்பது தெரிந்ததால், ஆட்சியை நிர்ணயிக்கும் பலம் பெறுவது மட்டுமே அவரது முதற்கட்ட இலக்காக இருக்கலாம். அதன்படி, விஜய் கண்ணசைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்கமுடியும் என்ற கட்டாய நிலை ஏற்படும்போது தமிழகம் தலைகீழ் மாற்றத்தைச் சந்திக்கும் - ஒரு சமூக ஊடக உரையாடல் இது.
‘வந்தால் முதலமைச்சராகவே வருவேன்’ என்று சொல்லும் விஜய், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில் எந்த மாதிரியான பேரத்தில் ஈடுபடுவார்? முதல்வர் பதவியைப் பெற்று நேரடியாக அமைச்சரவையில் பங்கு கோருவாரா அல்லது இஷ்டப்படி ஆட்டிப் படைக்கும் நோக்கில் வெளியிலிருந்து ஆதரவு என்பாரா? அப்படியெல்லாம் செய்வதற்கு இரண்டுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களையாவது தவெக பெற்றிருக்குமா? - உரையாடலிலும் விவாதங்களிலும் பங்கேற்றோரின் கேள்விகள் இவை.
‘தொங்கு சட்டமன்றம்’ என்பது அரசியல் அபாயத்தின் அறிகுறி. நிச்சயமற்ற அரசாங்கத்தை அது ஏற்படுத்தும்; ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற விளையாட்டுகளுக்கு வழிவகுத்து குறுகிய காலத்தில் இன்னொரு தேர்தலுக்கு வாய்ப்பளிக்கும்; நிலையான அரசாங்கம் ஏற்படும் வரை குழப்பமே நீடிக்கும்; அதுவரை மக்கள்நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்படும்; போராலும் பொருளியல் சீர்குலைவுகளாலும் பிளவுபட்டிருக்கும் உலகில், நிலையான அரசாங்கத்திற்காக வாக்களித்த மக்கள் ஏமாறும் நிலை ஏற்படும். ஜனநாயகம் பணநாயகமாகவும் பதவி நாயகமாகவும் உருமாறி எதிர்காலத்தைக் கடினமாக்கும் நிலை ஏற்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
இதுவரை அந்த அபாயத்தைத் தமிழ்நாடு சந்தித்ததில்லை. ஒருவேளை விஜய் உடைக்கும் வாக்குகள், கணிப்புகளையும் கருத்துகளையும் பொய்யாக்கி, நிலையான அரசாங்கத்தை ஏதேனும் ஒரு கட்சி அமைக்கும் நிலையை ஏற்படுத்தினால் அந்த அபாயம் தவிர்க்கப்படும்.
ஒரு நடிகர் அரசாங்கத்தை அமைத்து, முதல்வர் நாற்காலியில் அமர்வது அவ்வளவு சுலபமானதல்ல. தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்து மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரையும் வெறும் திரை நட்சத்திரங்களாக மட்டும் பார்க்கக்கூடாது. மிகப் பெரும் அரசியல் பின்புலத்திலிருந்து உருப்பெற்று வந்தவர் எம்ஜிஆர். அவருடைய அடியொற்றி வந்தவர் ஜெயலலிதா. அந்த இருபெரும் ஆளுமைகளால் நிலையான அரசாங்கமே தொடர்ந்தது என்பதும் அதனால் மக்களிடம் நிம்மதி இருந்தது என்பதும் வரலாறு. -திருநா

