ஈரோடு: தமிழக மக்களை நம்பியே தாம் அரசியலுக்கு வந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
ஈரோட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு செல்வாக்குள்ள மாவட்டம் என்பதால் அவரது ஏற்பாட்டில் இந்தப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காவல்துறை 84 நிபந்தனைகளை விதித்திருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதலேயே ஈரோட்டில் தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
கோவை வழியாக ஈரோடு வந்து சேர்ந்த விஜய், தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக உரையாற்றினார். தனக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள தொடர்பு, தாம் திரையுலகில் நடிக்கத் தொடங்கியது முதல் இன்று வரை நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த உறவை யாராலும் பிரிக்க முடியாது என்றார்.
தமிழக ஆட்சியாளர்களுக்கு அவர்கள் சேர்த்து வைத்துள்ள பணம்தான் பலம் என்றும், தமக்கு மக்கள் சக்திதான் பலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரியார் பெயரைச் சொல்லி கொள்ளையடிப்பவர்களே என் கொள்கை எதிரி.
“அண்ணா, அக்கா, தங்கைகள், நண்பர், நண்பிகள் என அனைவரும் கொடுக்கும் ஆதரவைக் கெடுக்க அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற அவதூறுகளை நம்பி சிலர் பிழைப்பு நடத்துகின்றனர்,” என்றார் விஜய்.
தொடர்புடைய செய்திகள்
‘வாழ்நாள் முழுவதும் என்னிடம் நிற்பீர்களா?’ என்று தொண்டர்களை நோக்கி விஜய் கேள்வி எழுப்ப, ‘நிற்போம் நிற்போம்’ என்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியாரும் தவெகவின் கொள்கைத் தலைவர் அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்துகள் என்று குறிப்பிட்ட விஜய், அறிஞர் அண்ணா, எம்ஜிஆரை நாங்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது என யாரும் சொல்ல முடியாது என்றார்.
“பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளை அடிக்காதீர்கள். பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளையடிக்கும் கும்பல்தான் நமது கொள்கை எதிரி. எதிரிகள் யாரென்று சொல்லிக்கொண்டு தான் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களுக்கும் நமக்கும் தான் போட்டி. களத்தில் இல்லாதவர்கள் எல்லாம் எதிர்க்க முடியாது,” என்றார் விஜய்.
மக்களுக்கு அரசு வழங்குவது எதுவும் இலவசம் கிடையாது என்றும் அந்தச் சலுகைகள், திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அப்படிப்பட்ட திட்டங்களை வழங்கிவிட்டு ‘ஓசி ஓசி’ என ஆட்சியாளர்கள் இழிவுபடுத்துகின்றனர். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. நான் பேசுவது அனைத்தும் சினிமா வசனம், சினிமாவில் வருவது போல் பேசுகிறேன் என ஆட்சியாளர்கள் விமர்சிக்கின்றனர்.
“அவதூறுகளைப் பரப்புவதும் கேவலமாகப் பேசுவதும்தான் அவர்களது அரசியல். அப்படிப்பட்ட அரசியலை அவர்களைவிட எனக்கு நன்கு தெரியும். ஆனால் அது தேவையில்லை,” என்று விஜய் நேரடியாக திமுகவை விமர்சித்தார்.

