சென்னை: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தமக்கு பேரதிர்ச்சி அளித்தது என்றும் அப்படியொரு சம்பவம் நடக்கும் எனத் தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
என்டிடிவி ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்தான் தனக்கு முன்மாதிரிகள் என்றார்.
‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட இன்னும் அனுமதி கிடைக்காததால் அதன் தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தாம் வருத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்று ஏதாவது நடக்கும் என்று தாம் முன்பே எதிர்பார்த்து மனத்தளவில் தயாராக இருந்ததாக விஜய் கூறினார்.
தாம் இந்தி நடிகர் ஷாருக்கானின் ரசிகர் என்று கூறிய அவர், அரசியலில் அடியெடுத்து வைக்க மனத்தளவில் தாம் முன்பே தயாராகிவிட்டதாகக் கூறினார்.
பல ஆண்டுகளாகத் திரையுலக நட்சத்திரமாக இருந்துவிட்ட தமக்கு, இந்த மாற்றம் கடினமாக இருந்தது என்றும் அரசியலுக்கு வருவதால், தாம் குறிவைக்கப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றும் விஜய் தெரிவித்தார்.
“நான் அரசியல் களத்தில் ‘கிங் மேக்க’ராக இருக்க விரும்பவில்லை. தேர்தலில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். பிறகு நான் ஏன் ‘கிங் மேக்க’ராக இருக்க வேண்டும்.
“தேர்தல் ஆணையம் நாங்கள் கேட்ட ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியது. இதை எங்கள் தேர்தல் வெற்றியை முன்கூட்டியே சொல்லக்கூடிய தெய்வீக அசரீரியாகவே கருதுகிறேன்,” என்றார் விஜய்.
தமது அரசியல் பயணம் ஒரு தேர்தலுடன் முடிவடையாமல் நீண்ட காலம் இருக்க வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே தமது இலக்கு என்றார்.

