தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன்: தர்மேந்திர பிரதான்

3 mins read
409f34dc-8700-4093-b914-4ff1d90736f7
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். - படங்கள்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: தமிழக அரசை, தமிழக எம்பிக்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறியதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், நான் அவ்வாறு கூறியிருந்தால் எனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்கியது.

அப்போது, தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவது ஏன் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசியக் கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தி திணிக்கப்படுவது போல் தமிழக அரசு தவறான பரப்புரையைச் செய்து வருகிறது. தமிழக மாணவர்களைத் திமுக அரசு வஞ்சிக்கிறது. அவர்களது எதிர்காலத்தைப் பாழ்படுத்துகிறது,” என்று குற்றம் சாட்டினார்.

அமைச்சரின் இந்தப் பதிலை விரும்பாத திமுகவினர் முழக்கமிட்டனர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவை கூடியபோது, மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பி கனிமொழி பேசினார்.

“இன்று நான் வலியோடு இருக்கிறேன். அமைச்சரின் பதில் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு, தமிழக எம்பிக்கள், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் கூறி இருக்கிறார்.

“அமைச்சருக்கும் பிரதமருக்கும் தமிழக முதல்வர் நிதியை ஒதுக்கும்படி கோரி கடிதம் எழுதி உள்ளார். தமிழக எம்பிக்கள் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை,” என தெரிவித்தார்.

கனிமொழியின் பேச்சுக்கு விளக்கமளித்த கல்வி அமைச்சர், “கனிமொழி கூறியது போல் தமிழக அரசை, தமிழக எம்பிக்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறவில்லை. எனினும், நான் எனது அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். நான் பேசியது எவரது மனதையாவது புண்படுத்தி இருந்தால், நான் எனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்,” என்றார்.

“தமிழ்நாடு பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக ஒப்புக்கொண்டால், அவர்களுக்கும் நிதி வழங்கப்படும்,” எனத் தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

அமைச்சரின் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்.

“தமிழ்நாட்டுக்கான நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?

“பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா, முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ் மக்களை மத்திய அமைச்சர் அவமதித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டு மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு தர்மேந்திர பிரதானின் பேச்சே சான்று. நமது எம்.பி.க்களை அவமதிப்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல்தான்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்