சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) காணொளி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அந்தக் கூட்டத்தில் 82 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், தேர்தல் சாவடிக் குழுக்களை முழுமையாக அமைத்துக் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் அந்தக் கூட்டத்தில் திரு எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். அதிமுகவினருக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் அவர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சரான திரு பழனிசாமி ஆவேசமாகப் பேசினார். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. மீண்டும் அதுபோன்ற நிலையை ஏற்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் திமுக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுடன் அதிமுக நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக திரு பழனிசாமி குறிப்பிட்டார். அவ்வாறு செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
அத்தகையோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்றும் திரு பழனிசாமி தெரிவித்தார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திரு பழனிசாமி தனது அதிரடியான போக்கை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் சொன்னார் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, கூட்டணி தொடர்பாக யாரும் பொது வெளியில் பேசக்கூடாது என்றும் உள்கட்சி விவகாரங்களைப் பொது மேடையில் பேசக்கூடாது என்றும் திரு பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும், உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள். நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. தனிப்பட்ட பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது. கூட்டணி விவகாரம் குறித்து யாருடனும் விவாதிக்கக்கூடாது,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.