சென்னை: உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத் திறனுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், தமிழக கிராமப்புற ஆசிரியர்களுக்கு ‘ஏஐ’ துறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மொத்தம் 40 மணிநேரம் வழங்கப்பட உள்ள இந்தப் பயிற்சியானது, ஆங்கில வழியில் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் இந்தப் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பயிற்சியை வழங்கும் சென்னை ஐஐடி கல்வி நிலையம், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளியில் பாடம் எடுக்கும் கிராமப்புற ஆசிரியர்களுக்காக ‘AI for Educators - K12 Teachers’ என்ற தலைப்பில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடங்களைத் திட்டமிடுதல், கதை சொல்லலில் ஏஐயின் பங்கு, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்தல், ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ மூலம் மாணவர்களை ஈர்த்தல் போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்ப உத்திகள் இந்தப் பயிற்சியின்போது ஆசிரியர்களுக்கு விரிவாகக் கற்றுத்தரப்பட உள்ளதாக ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சியின் முடிவில் இணையம் வழித் தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சென்னை ஐஐடி சார்பாக உரிய சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் கிராமப்புற ஆசிரியர்கள் இந்தப் பயிற்சிக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐஐடி மேலும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு கிராமப்புற ஆசிரியர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

