சென்னை: தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5,000க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு முதலாம் வகை (டைப்-1) நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான நோய் பாதிப்புப் பதிவேடு உருவாக்கும் நடவடிக்கை கடந்த 2024 ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது.
நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைத் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதும்தான் இந்தப் பதிவேட்டின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.
அரசு, தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நீரிழிவு பாதிப்புள்ள எல்லா குழந்தைகளின் பெயர்களும் இந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இந்தப் பதிவேடு தொடர்பான பணிகள் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் 5,064 குழந்தைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் ஏழு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலாம் வகை நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் 130 மையங்களைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் கூடுதலாக 13 சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிவேட்டு முறை வெகுவாக உதவுவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மாவட்ட வாரியாக நோய் பாதிப்பு, தொடர் சிகிச்சை குறித்து தரவுகளைச் சேகரிப்பதன் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமிட முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறிப்பாக ‘இன்சுலின்’, மாத்திரைகள் வழங்குவதைத் திட்டமிட முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

