நாகர்கோவில்: இன்னும் மூன்றாண்டு காலத்தில் இந்தியா 155 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவத் திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
மனிதரை விண்ணுக்கு ராக்கெட்டில் அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பரில் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சிறப்புப் பயிலரங்கில் பங்கேற்ற நாராயணன், செய்தியாளர்களிடம் பேசினார்.
“மனிதரை விண்ணுக்கு ராக்கெட்டில் அனுப்பும் ‘ககன்யான்’ என்ற திட்டத்தை இஸ்ரோ நடைமுறைப்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, இந்தியர் ஒருவரை ஏஓஜி முறைப்படி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி, அவரை அங்கே பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் அவரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வர இருக்கிறோம்.
“இதற்கான, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“இந்தத் திட்டம் 2012 ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. அப்போது அதற்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட் அனுப்பப்படும். தொடர்ந்து இதுபோல இரு ராக்கெட்கள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.
“2027ஆம் ஆண்டு மனிதருடன் ராக்கெட் அனுப்பப்படும். இன்னும் மூன்றாண்டுகளில் 155 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ திட்டங்கள் உள்ளன. எனவே எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்.
“ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக்கூடங்களை இஸ்ரோ சார்பிலும் அமைத்துள்ளோம். இது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்புவது குறித்தும் பிரதமர் அறிவித்துள்ளார்.
“நிலவில் ராக்கெட்டை இறக்குவது என்பது எளிதானதல்ல. நம்மிடம் இருக்கும் மார்க்-3 ராக்கெட் 10,000 கிலோ எடையைத்தான் கொண்டு செல்லும். நிலவில் ராக்கெட்டை இறக்கவேண்டும் என்றால் 125 டன் எடையைக் கொண்டு செல்ல வேண்டும்,” என்றார் வி. நாராயணன்.