புதுடெல்லி: இந்தியாவில் நீண்ட வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், திபெத்திய அகதிகள், சில குறிப்பிட்ட பாகிஸ்தானியக் குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கான கடப்பிதழ், விசா கட்டுப்பாடுகளில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்டுள்ள ‘குடியேற்றம், வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) ஆணை 2026’ல் இப்புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மலேசிய அல்லது சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்று, அந்நாடுகள் வழங்கிய கடப்பிதழ் மூலம் 2009 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியா திரும்பியவர்கள், 2015 ஜனவரி 9 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் பதிவுசெய்து புகலிடம் புகுந்த இலங்கைத் தமிழ்க் குடிமக்கள் உள்ளிட்டோர் தங்களின் கடப்பிதழ் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்து, அவற்றை மீண்டும் புதுப்பிக்க முடியாத சூழல் உள்ளிட்டோர்க்குச் இச்சலுகை பொருந்தும்.
2009 டிசம்பர் 31க்கு முன் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள், தேசிய அடையாள அட்டை இல்லாமையால் பயண ஆவணங்களைப் புதுப்பிக்க முடியாதநிலையில் வழக்கமான நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். பாகிஸ்தானில் திருமணம் செய்யாதிருத்தல், சொத்து வாங்காதிருத்தல், அங்குத் திரும்பமாட்டோம் என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டோர், காவல்துறை எதிர்மறை அறிக்கைகள் இல்லாதிருப்பது ஆகியவை இச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளாகும்.
மத ரீதியான துன்புறுத்தல் காரணமாகவோ அல்லது அதற்கான அச்சத்தின் காரணமாகவோ புகலிடம் தேடி, 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்த ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், பௌத்தர், சமணர், பார்சி, கிறித்துவ சமூகத்தினருக்கும் இந்த விலக்குகள் பொருந்தும்.
எனினும், கடப்பிதழ், விசா விலக்குகள் இந்தியாவில் காலவரையின்றி தங்குவதற்கான நேரடி அனுமதியை வழங்கிவிடாது. திருத்தப்பட்ட விதிகளின் கீழ் வரும் வெளிநாட்டினர், தொடர்ந்து தங்குவதற்குரிய விசாவைப் பெற வேண்டும். புதிய ஆணை குடியுரிமை, இந்தியாவுக்குள் நுழைந்த தேதி, பயண வரலாறு, தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட விலக்குகளை வரையறுத்துள்ளது.
மேலும், அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் இந்தியாவுக்குப் பயணம் செய்வதை புதிய திருத்த ஆணை மேலும் எளிமையாக்கியுள்ளது.
