புதுடெல்லி: இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இண்டியா கூட்டணி வலு குன்றியிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்றார்.
“மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. 2026 மட்டுமின்றி 2031ஆம் ஆண்டிலும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும்,” என்றார் ஸ்டாலின்.
இண்டியா கூட்டணி வலிமை குன்றியிருப்பதைப் போல் தோற்றம் அளிப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர், இண்டியா கூட்டணியின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.
“வலுவாக இல்லையென்றாலும், இண்டியா கூட்டணி இன்னும் முழுமையாக இருக்கிறது என்பதாக உணர்கிறேன். எனினும், என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
“இண்டியா கூட்டணி முழுமையாக இருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். கூட்டணியை மீண்டும் ஒருங்கிணைக்க முடியும். அதற்கான கால அவகாசம் உள்ளது,” என்றார் ப.சிதம்பரம்.
தொடர்புடைய செய்திகள்
பாஜகவைப் போல எந்தவோர் கட்சியும் வலிமையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதை தமது அனுபவத்தை வைத்து உறுதியாகச் சொல்ல முடியும் எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வோர் துறையிலும் பாஜக ஈர்ப்பான வலிமையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பாஜகவின் பின்னால், இந்திய தேர்தல் ஆணையம் முதல் இந்தியாவின் கீழ் மட்டத்தில் உள்ள காவல் நிலையம் வரை இரண்டு இயந்திரங்கள் இந்தியா மொத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன என்றும் சிதம்பரம் விமர்சித்தார்.