ஜனநாயகன் ஓடிடி உரிமம் ரத்தாகிறது எனத் தகவல்

ரூ.120 கோடி உரிமத்தொகையைத் திரும்பக் கேட்கும் அமேசான் ஃப்ரைம்

ஜனநாயகன் ஓடிடி உரிமம் ரத்தாகிறது எனத் தகவல்

2 mins read
d6b5c5ee-7f0a-43a0-8839-a15d765248f0
படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படும் அமேசான் ப்ரைம் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: சினி உலகம்

சென்னை: ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிம ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக அறியப்படுகிறது.

படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படும் அமேசான் ஃப்ரைம் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் விநியோகஸ்தர்களும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன், வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகின்றது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் எனப் படத்தின் சான்றிதழுக்காக அலைந்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப்பெற்று மறுதணிக்கைக்குப் படத்தை அனுப்பிவைத்தது.

தற்போது மறுதணிக்கை குழுவினர் படத்தைப் பார்த்து சான்று அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் சூழலில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் பிரசாரப் படமாக கருதி ஜனநாயகன் திரைப்படத்துக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கும்.

தேர்தல் முடிந்த பின்னர், மே அல்லது ஜூன் மாதத்தில்தான் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என்ற சூழல் நிலவுகிறது.

இந்தப் படத்துக்காக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ரூ. 500 கோடி வரை செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. திட்டமிட்ட தேதியில் இருந்து 5 மாதங்கள் கழித்தே படம் வெளியாகும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் பெருமளவிலான இழப்பீட்டைச் சந்திக்க நேரிடும்.

எனினும், தயாரிப்பு நிறுவனம், ஓடிடி நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்