சென்னை: அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டோர் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
எனினும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியுமென ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இடம் இல்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளார் எடப்பாடி.
இந்நிலையில், அவினாசி அத்திக்கடவு திட்டக்குழு சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர்.
விழாவுக்கான அழைப்பிதழிலும் ஆங்காங்கே வைக்கப்பட்ட பதாகைகளிலும் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் படம் ஏதும் இடம்பெறவில்லை. இதைக் கண்டிக்கும் விதமாகவே செங்கோட்டையன் தரப்பு பாராட்டு விழாவை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
“எங்களை உருவாக்கியவர் ஜெ.ஜெயலலிதாதான். ஆனால் அவருடைய புகைப்படங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது கடைசி நேரத்தில்தான் எனக்குத் தெரியவந்தது. முன்கூட்டியே இவ்விழா குறித்து என்னிடம் ஆலோசனை நடத்தியிருந்தால் கட்சித்தலைமையின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றிருப்பேன்.
தொடர்புடைய செய்திகள்
“அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா நிதி ஒதுக்கினார். இந்த விவரத்தை கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளேன்.
“பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. நான் விழாவுக்குச் செல்லாததன் மூலம் இந்த விவகாரத்தை கட்சித் தலைமையிடம் கொண்டு சென்றதாகவே கருதுகிறேன்,” என்று கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், கட்சித் தலைமைக்கு எதிராக வெளிப்படையாகப் பேசியிருப்பது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

