மும்பை: தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை வாரியம் அதன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மும்பையில் உள்ள அவ்வாரியத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தணிக்கை வாரியம்தான் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மக்களைத் தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டு என்றும் கூறப்பட்டுள்ளது.
“பொதுவாக, படத்தணிக்கைக்காக கேடிஎம் (Key Delivery Message) என்ற பாதுகாப்பு முறையை வாரியம் பின்பற்றுகிறது.
“இந்த கேடிஎம் கடவுச்சொல் சம்பந்தப்பட்ட சினிமா திரைப்படத் தயாரிப்பாளரிடம் மட்டுமே இருக்கும். கடவுச்சொல் இல்லாமல் படத்தைப் பார்க்க முடியாது,” என்று தணிக்கை வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் டிசிபி (மின்னிலக்க சினிமா தொகுப்பு) விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதலுடன் மார்ச் 17ஆம் தேதி மும்பையில் ஒப்படைக்கப்பட்டது என்றும் அப்போது முதல் அந்த நகல் அவர்களிடம்தான் உள்ளது என்றும் தணிக்கை வாரியத்தின் விளக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

