சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை, அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் அதிமுகவில் ஒரு பிரிவினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களில் அன்வர் ராஜாவும் ஒருவர்.
அண்மையில் அவர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ்நாட்டில் காலூன்றத் துடிப்பது பாஜகவின் எண்ணம் என்றும் அது ஒருபோதும் நடக்காது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அன்வர் ராஜா கூறியிருந்தது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக, பாஜகவை சேர்ந்த சில தலைவர்கள் அவ்வப்போது கூட்டணி குறித்து தெரிவித்து வந்த கருத்துகளும் அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறின.
இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 21) திடீரென சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார் அன்வர் ராஜா. இதுகுறித்து செய்தி ஊடகங்களில் தகவல் வெளியானது.
அடுத்த சில நிமிடங்களிலேயே அன்வர் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரு அன்வர் ராஜா காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து, தற்போது வரை அதிமுகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராவார்.
சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அவர், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி என்றார்.
அதிமுகவில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை என்று குறிப்பிட்ட அவர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடி பழனிசாமி பெயரை ஓரிடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.