சென்னை: மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், ஜூலை 25ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், அக்கட்சித் தலைவரான கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்றது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜூலை 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து இம்முறை திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, நடிகர் கமல்ஹாசன், சிவலிங்கம் ஆகியோரும் அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவைக்கு ஏற்கெனவே தேர்வுபெற்ற வைகோ, வில்சன், சண்முகம், எம்எம்.அப்துல்லா, அன்புமணி ராமதாஸ், சந்திரசேகர் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

