கீழடி அறிக்கை; இந்தியத் தொல்லியல் வரலாற்றை நேர்மையுடன் அணுக வேண்டும்: சு. வெங்கடேசன்

கீழடி அறிக்கை; இந்தியத் தொல்லியல் வரலாற்றை நேர்மையுடன் அணுக வேண்டும்: சு. வெங்கடேசன்

1 of 2
கோப்புப் படம்: விகடன்
கோப்புப் படம்: நியூஸ் அரேனா இந்தியா

23 Sep 2026 - 7:10 pm

2 mins read

மதுரை: பாஜக ஆட்சியில் இருக்கும்வரை கீழடி அகழாய்வு அறிக்கை வெளிவராது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமையாகக் சாடியுள்ளார்.

அண்மையில் இந்தியக் கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், கீழடி அறிக்கை முந்தைய தமிழக அரசின் அரசியல் அழுத்தத்தால் எழுதப்பட்டது என்றும் அதில் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சு.வெங்கடேசன், கீழடி அகழாய்வு நடைபெற்றபோது தமிழகத்தில் அதிமுக ஆட்சியே நடைபெற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார் என்றும் இதில் எங்கிருந்து அரசியல் நுழைந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள், கங்கைச் சமவெளி நகர நாகரிகத்திற்கு முன்பே தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு செழிப்பான நகரமயமான பண்பாடு நிலவியதை அறிவியல்பூர்வமாக உறுதிசெய்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மண்ணடுக்கியல், உலோகவியல், தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு நவீன அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வேதகால நாகரிகமே இந்தியாவின் மிகத் தொன்மையானது என்ற தங்களது சித்தாந்தக் கோட்பாட்டுக்குக் கீழடி கண்டுபிடிப்புகள் பெரும் சவாலாக அமைவதாலேயே, மத்திய அரசு இந்த அறிக்கையை வெளியிடத் தயங்குகிறது என்பதே தொல்லியல் ஆய்வாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

“அறிக்கையில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதனை அறிவியல் ரீதியான தரவுகளுடன் மறுக்க வேண்டுமே தவிர, அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையதன்று.

“இந்தியத் தொல்லியல் வரலாற்றை நேர்மையுடன் அணுகி, மறைக்கப்பட்ட உண்மை வரலாற்றை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

“கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் ஒரே எதிர்பார்ப்பு,” என்று சு.வெங்கடேசன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்