தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாட்டில் சிறப்பு சதுரங்க அகாடமி: ஸ்டாலின்

2 mins read
3b750a9b-2c64-4c93-a0c7-1e46b045205c
குகேஷுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். - படம்: இடிவி

சென்னை: தமிழ்நாட்டில் ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் குகேசுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவில் பங்கேற்று ரூ.5 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை குகேசுக்கு வழங்கி உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.

“விளையாட்டுத் திறமையுடன் மன உறுதியும் இருந்ததால் வெற்றி கிடைத்ததாக குகேஷ் கூறியிருந்தார். அவற்றுடன் எப்போதும் புன்னகையுடன் இருக்கும் குணமும் விமர்சனங்களைத் தாங்கும் இயல்பும் இருப்பதுதான் இந்த வெற்றிக்குக் காரணம்.

“உலக வெற்றியாளர் ஆவதற்கு குகேஷ் எடுத்துக்கொண்டது வெறும் 11 ஆண்டுகள்தான்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

“இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் இவையெல்லாவற்றையும் தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோரும் உத்வேகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் உங்களையெல்லாம் அழைத்து குகேஷுக்கு இந்த பாராட்டு விழாவை நடத்துகிறோம்.

“குகேஷின் வெற்றி கொடுக்கும் நம்பிக்கை, இந்தச் சிறப்பு அகாடமி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இது குகேசுக்கான பாராட்டு விழா மட்டும் கிடையாது. விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் விழா இது,” என்றார் அவர்.

இந்தியாவில் உள்ள 85 சதுரங்க கிராண்டு மாஸ்டர்களில் 31 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர், சதுரங்க விளையாட்டில் தமிழகத்துக்கு மிகப் பெரிய வரலாறு உள்ளது என்று குறிப்பிடார் ஸ்டாலின்.

வரிவிலக்கு

இதற்கிடையே, உலக சதுரங்க சாம்பியன் குகேஷுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகைக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என சுதா எம்.பி வலியுறுத்தி உள்ளார்.

சாம்பியன்ஷிப் மூலம் குகேஷுக்கு கிடைக்கும் வருமானம் 11.34 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தப் பரிசுத் தொகைக்கு இந்திய வருமான வரிச் சட்டப்படி அவர் ரூ.4 கோடி வரை வரி செலுத்த நேரிடும்.

இந்த வரி முறையானது விமர்சனத்திற்கு உண்டானது. எனவே விளையாட்டில் பரிசுத் தொகை பெறும் வீரர்களுக்கு வரிச்சலுகை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்