தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருங்கும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

2 mins read
09fce443-2d42-4282-a60b-6e6a07988ef9
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.

தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் களப்பணியாற்றத் தொடங்கி உள்ளன.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குச்சாவடி முகவர் குழுக்கள் அமைத்தல், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் என அடிப்படை பணிகளை ஏற்கெனவே தொடங்கி, அவற்றை முடிக்க உள்ளன.

நாம் தமிழர் போன்ற சில கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகின்றன.

அடுத்த சில மாதங்களுக்குள் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கி, செயலாற்ற வேண்டும் என்பதால், தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையமும் தன் பங்குக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடிப்படை பணிகளைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர், புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர்கள் தங்கள் பெயர்களை இணையத்தளம் அல்லது அதற்கான தேர்தல் ஆணைய செயலி வாயிலாக சேர்க்க முடியும்.

இந்நிலையில், வாக்காளர்கள் பதிவை முறைப்படுத்துவது, குளறுபடிகளை களைவது போன்ற பணிளுக்காக தொகுதிவாரியாக வாக்காளர் பதிவு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதில், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான வாக்காளர் பதிவு அதிகாரிகள் யார் என்ற பட்டியலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், சார் ஆட்சியர் , மாநகராட்சிகளில் உதவி ஆணையர், நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்த அதிகாரிகள் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வர்.

ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பணிகளை முழுமையாகக் கண்காணிக்கும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துகளைக் கேட்டுள்ள தேர்தல் ஆணையம், அவற்றுக்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்