சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு, பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தியும் அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் விஜய்க்கு பேரவை மரபு முதல் நல்ல கொள்கைகள் எனக் குறிப்பிட்டு ஐந்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
முதலாவதாக, தவெக ஆட்சிக் காலத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மரியாதைத் தமிழகம் சிதைத்துவிடாமல், சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
“இரண்டாவதாக, நீங்கள் சட்டமன்றத்துக்குள் விஜய்யாக நுழையுங்கள். எது திராவிடம், எது திராவிடம் அல்ல என்ற வார்த்தை அலங்காரத்துக்குள் எல்லாம் தயவுகூர்ந்து செல்லாதீர்கள்.
“முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் உங்களுக்கு முன்னவரே தவிர உங்களின் எதிரி அல்ல. அதேபோல் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் இருப்பு உங்களுக்கு ஒரு காதல் பாடலைப் (டூயட்) போல அமையட்டும். மாறாக, கசப்பான போட்டியாக இருக்கவேண்டாம்,” என்பதே கோபாலகிருஷ்ண காந்தியின் இரண்டாவது அறிவுரை.
மூன்றாவதாக, கொள்கை குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால், எனது கொள்கை மனசாட்சிப்படி நடப்பது என்று சொல்லவேண்டும் என்றும், நான்காவதாக அதிகாரிகள், சகாக்களை நம்புவதுடன் அவர்களை ஏவலாளிகளாகப் பார்க்கக்கூடாது என்றும் காந்தியின் பேரன், விஜய்க்கு அறிவுறுத்தி உள்ளார்.
கடைசியாக, தமிழகத்தில் நல்லாட்சி தொடர்வதிலும் பொருளியல் வளர்ச்சி நீடிப்பதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மை இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவுக்கான கலங்கரை விளக்கமாக விளங்க வேண்டும் என்றும் கோபாலகிருஷ்ண காந்தி வலியுறுத்தி உள்ளார்.

