சென்னை: தமிழகத்தில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் காவல்துறை புதுத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, ஆபத்தில் இருப்பவர்களின் அழைப்பு இனி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வராமல், நேரடியாக சுற்றுக்காவலில் உள்ள காவல் அதிகாரிகளுக்குச் செல்லும். இதற்கான சிறப்புச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது காவல்துறையின் உதவியை நாடுவோர், தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் 100, 101, 112 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள முடியும்.
இந்த அழைப்புகள், நேரடியாக எழும்பூரில் உள்ள மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லும். பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதாவது, அழைப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள், சம்பந்தப்பட்ட மாநகர, மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு பகிரப்படும். இதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் உள்ள சுற்றுக்காவல் வாகன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆபத்தில் இருப்பவர்கள் மீட்கப்படுவர்.
எனினும், இதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்களால் ஏற்படும் தாமதம் காரணமாக, சில சமயங்களில் சிலருக்கு உதவ முடியாமல் போகிறது.
எனவே தாமதத்தைக் குறைக்கும் வகையில், ஆபத்தில் உள்ளோர் அழைப்புகள் இனி நேரடியாக சுற்றுக்காவல் வாகன அலுவலருக்குச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சிறப்புச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அது செயல்பாட்டிற்கு வரும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இச்செயலி மூலம் சுற்றுக்காவல் வாகனங்கள் எங்கு உள்ளன, உதவி கோருபவர் எங்கு உள்ளார், அவர் தெரிவித்த விவரங்கள் ஆகிய அனைத்தையும் சென்னை கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருப்பவர்களும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். இதற்கேற்ப சுற்றுக்காவல் வாகனங்களில் ‘ஜிபிஎஸ்’ அமைப்புடன் கூடிய கைப்பேசிகள் இணைக்கப்பட்டுள்ளன.