நாமக்கல்: தமிழகத்தில் உறுப்பு தானம் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படும் நிலையில், சிறுநீரகத்தை அடுத்து கல்லீரல் முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நாமக்கல்லில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பலரிடம் சிறுநீரகங்களை முறைகேடாகப் பெற்று மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகளைத் தானமாக வழங்கக் கோரி ஏராளமானோர் அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் தானமாக வழங்கப்படுகின்றன.
உயிருடன் இருப்போர், தங்களுடைய ரத்த உறவுகளுக்குள் மட்டும் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளிக்க அனுமதியுண்டு. ரத்த உறவுகள் அல்லாதவர்கள் தானம் அளிப்பது குற்றமாகக் கருதப்படும்.
ஆனால், பல மாதங்களாகத் தமிழகத்தின் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஏழைகளைக் குறிவைத்துச் செயல்பட்ட முகவர்கள் பலர், அவர்களிடம் பலவிதமாகப் பேசி, குறைந்த விலைக்கு சிறுநீரகங்களைப் பெற்றுள்ளனர். பின்னர் அவற்றைச் சட்டவிரோதமாகச் செயல்படும் நிழல் சந்தையில் அதிக விலைக்கு விற்றுள்ளனர்.
ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மட்டும் தானமளித்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு, ரூ.50 லட்சத்துக்கு பல முகவர்கள் சிறுநீரகங்களை விலைபேசி விற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், சிறுநீரகங்களுக்கு அடுத்தபடியாக பலரிடம் கல்லீரலில் ஒரு பகுதியைப் பெற்று, இதேபோல் மோசடி செய்திருப்பதாகத் தெரிகிறது. இதற்காக தானம் அளித்தவரும் பெறுபவரும் ரத்த உறவுகள் எனச் சித்திரிக்கும் போலி ஆவணங்களைத் தயாரித்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கல்லீரல் முறைகேடு நடந்ததாகப் பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அலமேடு பகுதியைச் சேர்ந்த 37 வயதான அந்தப் பெண், தன் கணவரைப் பிரிந்துவிட்டதாகவும் தனது மகன், மகளுடன் தனியாக வசிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்குள்ள சில லட்சம் ரூபாய் கடன் சுமையில் இருந்து விடுபட, தரகர்களின் உதவியோடு தனது கல்லீரலில் ஒரு பகுதியை விற்பனை செய்ய அவர் முன்வந்துள்ளார்.
இதற்காக, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 8.30 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ள இந்தக் கல்லீரல் முறைகேடு குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரியும் தமிழக சுகாதாரத் திட்ட இயக்குநருமான வினித் தலைமையில் குழு அமைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கல்லீரல் முறைகேட்டில் ஈடுபட்ட தரகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.