சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோடியாக, உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், தற்போது 315 காலிப் பதவியிடங்கள் உள்ளன.
மே மாதத்துக்குள் இந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது, உள்ளாட்சித் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழகத்தில் காலியாக உள்ள 448 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலிப் பதவியிடங்களுக்கும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 காலிப் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்கள் குக்கிராமங்களில் உள்ள மக்களைச் சென்றடைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, அரசியல் கட்சிகள் குக்கிராமங்களிலும் தங்களுக்கு ஆதரவு உள்ளதா என்பதைக் கண்டறிய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது வழக்கம்.
அந்த வகையில், புதிதாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக, உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளன.
தவெக இடைத்தேர்தலில் சாதிக்கும் பட்சத்தில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அக்கட்சியினர் நம்பிக்கையுடன் செயலாற்ற முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.

