சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பூங்காவில் செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டுத் திடல், 103 இருக்கைகள், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சித் திடல், வாகன நிறுத்தங்கள், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
பூங்கா உருவாக்கப்படும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் புதன்கிழமை (நவம்பர் 6) காலை ஆய்வு செய்தார்.
பணிகள் எப்போது முழுமையாக நிறைவு பெறும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார்.
மின்விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கூடுதலாக அமைப்பது குறித்த சில பரிந்துரைகளையும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அப்போது, பூங்கா அருகில் உள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் சேகர்பாபு, குளத்தில்கூட தாமரை மலரக்கூடாது எனக் கிண்டலாகக் கூறினார்.
