சென்னை: கரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியிலும் இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கையும் 7ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய ஆறு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆறு தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியைத் தவிர்த்து, ஏனைய ஐந்து தொகுதிகளிலும் அதிமுக உறுப்பினர்கள் பதவி விலகியதால் அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் இடைத்தேர்தலில் கரூர் தொகுதியும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, கரூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜூன் 29ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்து, தமது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார். இவரும் இனி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியேறியதன் மூலம் சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 41ஆகக் குறைந்துள்ளது. இப்படி, ஒவ்வொருவராக அதிமுகவைவிட்டு வெளியேறுவது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டுமின்றி, அதிமுக.நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
முன்னதாக, எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியை உருவாக்கினர்.
பின்னர் நடந்த சமாதானப் பேச்சுக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் சில உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகத் திரும்பினர். எனினும், சி.வி. சண்முகம், சி.விஜயபாஸ்கர் இருவரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தனர்.
இதற்கிடையே, அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளைத் துறந்து தவெகவில் இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் தங்களது பதவியைத் துறந்துள்ளனர். சி.விஜயபாஸ்கர் தமது ஆதரவாளர்களுடன் திங்கட்கிழமை தவெகவில் இணையவிருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் மறைவு உள்ளிட்ட காரணங்களால் அந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது.

