சென்னை: தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஆளும் தவெக, முதன்மை எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிரசாரத்தின் இறுதி நாளன்று கட்சிப் பிரமுகர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். தேர்தல் விதிகளின்படி மாலை 6 மணி முதல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்குத் தொடர்பில்லாத வெளியாள்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகளும் தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இடைத்தேர்தலையொட்டி இரு தொகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
