சென்னை: அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியில் அமைப்புச் செயலாளராக இருந்தவருமான டாக்டர் வா.மைத்ரேயன் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) காலை திமுகவில் சேர்ந்தார்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை அந்தக் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
அவர் இணைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991ஆம் ஆண்டு பாஜகவில் தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை தலைவர் என அந்தக் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
பின்னர், 1999ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
2002ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தபோது திடீரென பழனிசாமி அணிக்குத் தாவினார் மைத்ரேயன்.