சென்னை: தமிழகத்தில் வருமான வரி செலுத்துவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரிக் கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய அரசு வருமான வரி குறித்த புதிய விதிமுறைகளை அறிவித்தது.
பழைய முறைப்படி, பத்து லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெற முடியும். மேலும், காப்பீடு, வீட்டுக்கடன் உள்ளிட்ட சிலவற்றின் மூலம் குறிப்பிட்ட அளவு வரியைச் செலுத்தாமல் விலக்கு பெற முடியும்.
இந்நிலையில், தமிழகத்தில் பலர் போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்துள்ளது வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 22,500 பேர் போலி ஆவணங்கள் அளித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் வரி ஏய்ப்பு, வரி திரும்பப் பெறும் மோசடி நடந்துள்ளது என்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து விரிவான விசாரணை தொடங்கி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

