‘சர்க்கார்’ பட நாயகன் சர்க்கார் (அரசாங்கம்) அமைக்க முடியாமல் தத்தளித்த நிலையில் தவெகவை மையப்படுத்தி வெளியிடப்பட்ட கருத்துகள் சமூக ஊடகங்களை சூடாக்கி வருகின்றன. காங்கிரஸ்-திமுக என்னும் ஒரு முரணான கூட்டணி முடிந்துவிட்ட நிலையில் திமுக-அதிமுக என இன்னொரு முரண்பாட்டுக் கூட்டணி முளைப்பதைப்போல தகவல்கள் பரவின.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ‘நீயும் நானும் மட்டும்தான்’ என்று இருந்த இருதுருவ அரசியலை ஈராண்டுக் கட்சியான தவெக புரட்டிப் போட்டுள்ளது. விஜய் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதற்காகவே, இத்தனை காலமாக எதிரும் புதிருமாக மோதிக் கொண்டு, ஆண்ட கட்சிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டு சேருவதாகப் பரவிய தகவல் நடுநிலையாளர்களைப் பதறச் செய்தது. என்னவொரு கருவாட்டு சாம்பார் அரசியல் இது என்று நகைக்கிறார்கள் ஒருசிலர்.
ஆனாலும், எம்ஜிஆர் காலம் முதல் ஏறத்தாழ 55 ஆண்டுகளாக முறைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் என்பதையும் தாண்டி, எதிரிக்கட்சிகளாக இருந்தோர் ஒன்று சேரலாம் என்ற சிந்தனையைத் தூண்டியதில் தவெகவுக்கு வரலாற்று வெற்றிதான்.
1979ஆம் ஆண்டு ஜனதாக் கட்சியின் மூத்த தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த பிஜு பட்நாயக், அதிமுக - திமுக இணைப்புக்கு முயன்று தோற்றார். இப்போது அப்படி நடுநிலையாக யாரும் முயற்சிக்காமலேயே இரு கட்சிகளும் தோழர்களாகக் கைகோப்பார்கள் என்னும் செய்தி பரவியதிலிருந்தே விஜய் அறிமுக அரசியலின் வலிமை புரிகிறது.
பகையை வளர்த்துக்கொண்டு எதிரிகள்போல செயல்பட்ட எம்ஜிஆரும் கருணாநிதியும் பிஜு பட்நாயக் முயற்சியால் நேரில் சந்தித்துப் பேசியும்கூட அந்த இரு கட்சிகளும் ஒன்றுசேர இயலாத அளவுக்கு அவற்றுக்கிடையிலான கொள்கை முரண்பாடுகள் இன்றுவரை உள்ளன. ஆனால், அதிமுக-திமுக உடன்பாடு என்பது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்கின்றன அவ்விரு கட்சிகளும்.
இப்படி திசை தெரியாது பயணம் செய்யும் தமிழக அரசியலை பாஜக வேடிக்கை பார்க்கிறது. மூன்றாவது கட்சி முன்னுக்கு வந்ததைத் தனக்கு சாதகமானதாக அந்தக் கட்சி கருதுவதாகக் கூறுகிறார்கள். காங்கிரஸ் சேராமல் இருந்திருந்தால், அதிமுக-பாஜக தலைமை தவெகவுக்குச் சாதகமான முடிவை எடுத்திருக்கக்கூடும் என்கிறார்கள்.
இன்னொரு பக்கம், திமுக உறவை வெட்டிக்கொண்டு காங்கிரஸ் போனதில் பாஜகவுக்குப் பெரும்நிம்மதி என்றும் பேசப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் என்னும் தேசியக் கட்சிகளின் துணை இன்றியே அடுத்தடுத்த தேர்தல்களைச் சந்திக்கப் போகிறது திமுக. ஏற்கெனவே உறவில் இருந்த காங்கிரசை 2014 மக்களவைத் தேர்தலில் கழற்றிவிட்டு பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட திமுக தோல்வியையே தழுவியது. இன்றைய தவெகபோல அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 39க்கு 37ல் வென்றது.
தனித்து களம் கண்ட அனுபவம் திமுகவுக்கு இதுவரை இருந்ததில்லை. எனவே, இனி வரும் தேர்தல்களில் திமுகவின் இறங்குமுகத்தைக் காண ஆவலுடன் பாஜக காத்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஆனாலும், திமுக தனியாகிவிட்ட வெற்றியைக் கொண்டாட பாஜகவுக்கு மனமில்லை. காரணம், விஜய்யின் செல்வாக்கு தமிழ்நாட்டையும் கடந்து, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிலும் எதிரொலிப்பதால் அதன் நிழலில் தென்மாநிலங்களில் காங்கிரஸ் இன்னும் அதிகமாக வளர்ந்துவிடுமோ என்ற சிந்தனைதான் என்கின்றனர் அவர்கள்.
“அதனால், பாஜகவைவிட உற்சாகத்தில் இருப்பது காங்கிரஸ்தான். பாஜக பக்கம் அதிமுக சாய்ந்துவிட்ட நிலையில், தோளில் ஏறிக்கொள்ள புதியதொரு கட்சியை ஆண்டுக்கணக்கில் தேடிவந்த காங்கிரசுக்கு தவெக கிடைத்துவிட்டது. நல்லுறவுடன் இருப்பதைப் போல காங்கிரசும் திமுகவும் முகமூடி அணிந்திருந்தாலும் அந்த உறவின் பயணத்தில் முற்களும் முரண்பாடுகளுமே அதிகம்.
“ஒவ்வொரு தேர்தலின்போதும் தொகுதிப் பங்கீட்டின் முடிவில் ‘ஏமாற்றம், அவமானம்’ என்ற வார்த்தைகளையே காங்கிரஸ் பயன்படுத்தி வந்துள்ளது. இனி அந்த அட்டைக்கத்திச் சண்டைக்கு வேலையில்லை. தவெகவிடம் தஞ்சம் புகுந்துள்ளதால் இனி எல்லாம் சுகமே என்ற நிம்மதியில் உள்ளது காங்கிரஸ்,” என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. -திருநா

