மைசூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட ஒப்புதல் அளிக்குமாறு, இந்திய அரசிடம் கர்நாடக மாநில முதல்வர் சிவகுமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீரைப் பாதுகாக்கவும் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தவும் மேகதாது திட்டம் அவசியம் என்றார்.
மேலும், இத்திட்டத்திற்கு வனப்பகுதி உட்பட 10,800 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், வனப்பகுதிக்கு மாற்றாக வேறு நிலத்தைப் பயன்படுத்த அரசு தயாராக உள்ளது என்றார் முதல்வர் சிவகுமார்.
மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக கர்நாடக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் மத்திய அரசிடம் மீண்டும் முறைப்படி ஒப்புதல் கோரப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“நாட்டின் நிலம், நீர், மொழி போன்ற விவகாரங்களில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
“அண்மையில் தமிழகம் சென்றபோது, மேகதாது திட்டம் குறித்துப் பேசினேன். கர்நாடகாவில் உள்ள காவிரி போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும்,” என்றார் திரு சிவகுமார்.


