சென்னை: மாநகராட்சி சார்பில், செல்லப் பிராணிகள், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு நுண்சில்லு (மைக்ரோசிப்) பொருத்தும் பணிகளை மேலாண்மை செய்ய திறன்பேசி செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இதையடுத்து, அனைத்து வகை நாய்களைப் பற்றிய விவரங்களை இணையத்தளத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் ஏறக்குறைய 200,000 நாய்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும். மேலும், நாய்களைப் பிடித்தல், தடுப்பூசி போடுதல், கண்காணித்தல் போன்ற பணிகளை மேலாண்மை செய்ய தனித் திறன்பேசிச் செயலியையும் உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ‘நுண்சில்லு’ நாய்களின் உடலில் பொருத்தப்படும்.
“நுண்சில்லு பொருத்தவும் இந்தச் செயலியை உருவாக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இந்தச் செயலி வழியாக செல்லப் பிராணிகளுக்கு எப்போது ‘ரேபிஸ்’ தடுப்பூசி போட வேண்டும் என்ற நினைவூட்டல், அவற்றின் உரிமையாளர்களுக்கு திறன்பேசி மூலம் குறுந்தகவலாகத் தெரிவிக்கப்படும்,” என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.