சென்னை: சென்னை மாநகர எல்லைக்குள் வளர்க்கப்படும் மாடுகள், எருமைகளுக்கு ‘மைக்ரோசிப்’ என்ற வில்லையை அதன் உடலில் பொருத்துவதும் அதற்கான உரிமம் வைத்திருப்பதும் கட்டாயம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அத்துடன், பரபரப்பான சென்னை சாலைகளில் மாடுகளால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது ஏறக்குறைய 22,875 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
சாலைகளில் சுற்றித் திரியும் ஒருசில மாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, மாநகராட்சி ஏற்கெனவே அபராதத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தியிருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4,237 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.2.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சி சார்பில் 17 இடங்களில் மாட்டுத் தொழுவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சாலைகளில் மாடுகள் திரிவதைத் தடுத்து, மாடு வளர்ப்பை முழுமையாக முறைப்படுத்த மாநகராட்சி புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, மாடு வளர்ப்போர் இனி மாநகராட்சியிடம் உரிய உரிமம் பெற வேண்டும். இதனைப் பெறும்போதே மாடுகளின் உடலில் ‘மைக்ரோசிப்’ பொருத்தப்படும்.
மாடுகளுக்கு உரிமம் பெற்று ‘மைக்ரோசிப்’ பொருத்த மார்ச் 18ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது, சென்னை மாநகரை விபத்தில்லா பகுதியாக மாற்ற உதவும் ஒரு தொழில்நுட்ப முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

